ஈரோடு அருகே அரசு பேருந்து ஜப்தி!

ஈரோடு அருகே விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காத காரணத்தால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ராமகவுண்டன்கோட்டையை சேர்ந்தவர் கூ‌லி‌த் தொ‌ழிலா‌ளி முருகன் (45). இவர் கடந்த 2002 ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்பகுதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதி ‌நிக‌ழ்‌‌விட‌த்‌திலேயே இறந்து போனா‌ர்.

பவானி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வ‌ந்த இ‌ந்த வழ‌க்‌கி‌ல் 2004 ம் ஆண்டு தீர்‌ப்பளித்த நீதிபதி, கோவை அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 500 வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் கடந்த மூன்றாண்டுகள் ஆகியும் இதுவரை நஷ்டஈடு வழங்கவில்லை.

இதை‌த் தொட‌ர்‌ந்து இற‌ந்து போன முருக‌னி‌ன் மனைவி கவுசல்யா, பவா‌னி சா‌ர்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிவேல், மூன்று ஆண்டுகள் ஆகியும் ந‌ஷ்டஈடு வழங்கப்படவில்லை. ஆகவே வட்டியுடன் சேர்ந்து ரூ.6 லட்சத்து 66 ஆயிரத்து 886 கொடுக்கவேண்டும். இந்த தொகை கொடுக்கும் வரை கோவை கோட்டத்திற்குட்பட்ட அந்தியூர் அரசு பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று மாலை அந்தியூரில் இருந்து கோவிலூருக்கு சென்ற அரசு பேருந்தை நீதிமன்ற பணியாளர்கள் சென்று ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட பேருந்து பவானி விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்