தகவல் பெறும் உரிமைச் சட்டம்: தமிழக அரசு விளக்கம்!
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (15:02 IST)
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பெரும்பாலான வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் தகவல் கோரி விண்ணப்பித்து தகவலைப் பெற முயற்சிக்கிறார்கள் என்றும் எனவேதான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விலக்களித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தகவல் பெறும் உரிமைச் சட்டம்”, லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சரியல்ல என்று சில தமிழ் நாளேடுகள் தலையங்கம் எழுதியிருக்கின்றன.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் மத்திய அரசு இயற்றிய சட்டம். அந்தச் சட்டத்தில் மாநில அரசுக்குக் கொடுத்துள்ள அதிகாரத்தின்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
லஞ்ச ஒழிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகளில் புலன் விசாரணை முடிந்து அரசு வழக்கு தொடுப்பதென முடிவு செய்வதற்கு முன்பு அவைபற்றிய தகவல்கள் வெளியே வருமானால், அது வழக்கின் போக்கை பெரிதும் பாதிக்கும்; மேலும் பெரும்பாலான நேர்வுகளில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் தகவல் கோரி விண்ணப்பித்து தகவலைப் பெற முயற்சிக்கிறார்கள்.
எனவேதான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்களித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்து அரசுக்கு இறுதி அறிக்கை வந்த பிறகு அது பற்றிய தகவல்களை முறைப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.