வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (13:35 IST)
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து சாலைகளும் பராமரிக்கப்படாததை கண்டித்தும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முறைகேடுகள் செய்யும் தி.மு.க. அரசை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை ஸ்ரீவில்லிப்புத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள, முக்கிய மாவட்ட சாலைகளும் மற்றும் பிற சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
இதன் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கோவில்பட்டி வரையிலும் உள்ள சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. ஆகையால் இப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பேருந்தில் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இது மட்டும் அல்லாமல் அங்குள்ள கிராமங்களுக்கு பள்ளிகள் இயங்கும் நேரங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அரசு பேருந்து சீட்டு இருந்தும் தனியார் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலைமைக்கு மாணவ- மாணவியர் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சி மன்றங்களில் தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் வேலை செய்வோருக்கு அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவாக ஊதியம் கொடுக்கப்பட்டதால் அனைத்துப் பணி களும் தற்போது நின்று போயுள்ளன. இந்தப் பணிகளில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து சாலைகளையும் பராமரிக்கப்படாதது, ஏழை, எளிய மாணவ-மாணவியர் பள்ளிக்குச் சென்று வர ஏதுவாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாதது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முறைகேடுகளைச் செய்வது ஆகியவற்றிற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.