நடிகர் வடிவேலு அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தே.மு.தி.க.வினர் 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நடிகர் வடிவேலு, சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரது அலுவலகத்தின் வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
வடிவேலு அலுவலகத்தின் எதிரே உள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த தே.மு.தி.க நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் இந்த வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வாகனங்களை எடுப்பது தொடர்பாக வடிவேலுவுக்கும், தே.மு.தி.க.வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வடிவேலு அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இது தொடர்பாக வடிவேலு, விருகம்பாக்கம் காவல்துறையினரிடம் கொடுத்த புகாரின் பேரில், விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் உள்பட 13 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 9வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக நடிகர் வடிவேலு, அவரது காவலாளி மாரிமுத்து ஆகியோருடன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 13 தே.மு.தி.க.வினரும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை பிறப்பித்த நீதிபதி பெஞ்சமின், வழக்கின் விசாரணை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.