பொதுப் பாதைகளை தலித் மக்கள் சுதந்திரமாக பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதி உள்ள கடிதத்தில், "மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் பொது இடத்தில் கட்டப்பட்டு இருந்த சுவர் இடிக்கப்பட்டு தலித் மக்களுக்கு ஒரு பாதையை மீட்டுத் தருவதில் தாங்கள் உரிய முறையில் தலையிட்டீர்கள்.
இந்தப் பாதையை தலித் மக்கள், தங்கள் தேவைக்கும், சுதந்திரமான முறையிலும் பயன்படுத்துவதற்கு ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டவிரோதமாக தடை ஏற்படுத்திய சம்பவங்களையும் இதில் காவல் துறையின் செயல்பாடு குறித்து உரிய நடவடிக்கைகளுக்காக தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
தலித் மக்கள் கொடுத்த புகார்கள் மீது பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் குற்றவாளிகளைக் கைது செய்யுமாறும், பதிவு செய்யாத பிரச்சினையில் உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகிறோம்.
மேலும் பொதுப் பாதைகளை தலித் மக்கள் சுதந்திரமாக பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க தாமதமின்றி மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் ஆவண செய்யுமாறும் வேண்டுகிறோம்.
16-8-08 அன்று பொதுப்பாதையை பயன்படுத்துவதற்காக தங்களது ஜனநாயக உரிமைகளை வலியுறுத்திய தலித் மக்கள் மீது போடப்பட்ட வழக்கை விலக்கிக் கொள்ளவும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும் வேண்டுகிறோம்.
உத்தப்புரம் தலித் மக்களின் இதர கோரிக்கைகளான பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத் தருவது, தலித் குடியிருப்பை நோக்கி செல்லும் சாக்கடையை ஸ்லாப் போட்டு மூடி ஊருக்கு வெளியே கொண்டு செல்வது போன்றவற்றையும் தாமதமின்றி நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று வரதராஜன் கூறியுள்ளார்.