9 பேரை ப‌றிகொடு‌த்த ‌கிரா‌மம் சோகத்தில் மூழ்கியது!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (11:08 IST)
ஈரோடு அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் லாரி புகுந்த சம்பவத்தால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது காசிபாளையம். இந்த கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மேட்டூரில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றி விருதுநகர் சென்ற லாரி நிலைதடுமாறி காசிபாளையம் சாலையின் ஓரத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

லாரியை திருநெல்வேலியை சேர்ந்த வேல்பாண்டியன் (24) என்பவர் ஓட்டிவந்தார். உடன் மற்றொறு ஓட்டுனர் இசக்கி (30) இருந்தார். இந்த கோரவிபத்தில் காசிபாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி (45) அவருடைய மனைவி தேவி (42), நாமக்கல் மாவட்டம் நாகபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (59) அவருடைய மனைவி ஜோதிமணி (45), மகன் அஸ்வின்குமார் (18) மற்றும் சவுரிபேகம் (45), அசரத்பானு (30), பிரஸலின் (5), ஆசிக்(2) ஆகிய ஒன்பது பேர் பரிதாபமாக இறந்தனர்.

அருண்ரசீத் (4), பத்மினி (60) ஆகியோர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் காசிபாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. நேற்று அங்கு யாரும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மக்கள் முழுவதுமாக மீட்புபணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் நடந்த பக்கத்துவீட்டினர் ஒருவித அச்சத்துடன் காணப்பட்டனர்.

இதற்கிடையில் சம்பவத்திற்கு காரணமான லாரி டிரைவர் வேல்பாண்டியன் மலையப்பாளையம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கொடுமுடி காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டி‌ரு‌ந்ததா‌ல் பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்