பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் ஆட்சி செய்வதற்கான தார்மீக உரிமையை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு இழந்துவிட்டது என்றும் தேசத்தை வாட்டி வதைக்கும் அத்தனை துன்பங்களுக்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லா வகையிலும் படுதோல்வி கண்டிருக்கும் மத்திய அரசுக்கு மேலும் ஒரு கரும்புள்ளியாக டெல்லியில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வு அமைந்து விட்டது. நிர்வாகத் திறமையற்ற அரசு என்ற பலிபீடத்தில் வன்முறையாளர்களின் கொடுமைக்கு பலியாகி உயிரிழந்த அப்பாவி பொது மக்களை எண்ணி என் இதயம் ரத்தம் சிந்துகிறது. வேதனையில் துடிக்கிறேன். எதற்கெடுத்தாலும் அடுத்தவர் மீது பழி போடும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குண்டு வெடித்த போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் குற்றம்சாற்றினார். இப்போது டெல்லியில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதை மத்திய அரசுக்கு தான் தெரிவித்ததாகவும், ஆனால் அது குறித்து ஏதும் செய்யாமல் மத்திய அரசு செயலிழந்து விட்டதாகவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகிறார்.
இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் நடக்கும்போது காங்கிரசும், பாரதிய ஜனதாவும் மாறி மாறி குற்றம்சாற்றுவதை தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பலிகடாய் ஆக்கப்பட்டுள்ளார். இதற்கு அவர் மட்டும் தான் காரணமா?
பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவுடன் செய்து கொள்ள இருக்கும் சர்ச்சைக்குரிய அணு சக்தி ஒப்பந்தம் குறித்த கவலையிலேயே மூழ்கி உள்ளார். பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு ஈவு இரக்கமற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தேசத்தின் கதவுகள் அகல திறந்து வைக்கப்பட்டுள்ளன.
எண்ணற்ற உயிர்கள் சேதம் அடைந்த பிறகு தான் மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை தளர்த்தி இருக்கிறது. எனவே, ஆட்சி செய்வதற்கான தார்மீக உரிமையை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு இழந்துவிட்டது. தேசத்தை வாட்டி வதைக்கும் அத்தனை துன்பங்களுக்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.