கருணை அடி‌ப்படை‌யி‌ல் ந‌ளி‌னி ‌விடுதலை : கி.வீரமணி வே‌ண்டுகோ‌ள்!

சனி, 20 செப்டம்பர் 2008 (13:06 IST)
''ராஜீவ்கா‌ந்‌தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருக்கும் நளினியை கருணை அடிப்படையில் ‌விடுதலை செ‌ய்ய வேண்டும்'' எ‌ன்று ‌திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் கி.வீரமணி வே‌‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
த‌ஞ்சாவூ‌‌ரி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ‌சிங்கள ராணுவத்தினர் ஈழத்தமிழர்களை விலங்குகளை விட கொடூரமாக வேட்டையாடி வருகின்றனர். ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் இனப்படுகொலை நடக்கிறது. இனிமேலும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. தொப்புள்கொடி உறவுள்ள தமிழ் சமுதாயம் நித்தம், நித்தம் அழிந்து வருகிறது.

நாகை, புதுக்கோட்டை, வேதாரண்யம், ராமேஸ்வரம் மீனவர்களை சுடுவதும், கைது செய்வதும், உடனே மத்திய அரசிடம் பேசுவது, அவர்கள் ‌சி‌றில‌ங்க அமை‌ச்ச‌‌ர்களிடம் பேசி மீனவர்களை விடுதலை செய்வது என்பது அன்றாட மார்க்கெட் நிலவரம் போல் நடக்கிறது.

மீனவர்களின் வாழ்வுரிமை பிரச்சினையாக இருந்தாலும் சரி, ‌சி‌றில‌ங்க தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சினையாக இருந்தாலும் சரி கேள்விக்குறியாக தான் உள்ளது. இதை கண்டித்து எனது தலைமையில் செ‌‌ப்ட‌ம்ப‌ர் 23‌ஆ‌ம் தேதி சென்னை பெரியார் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுபோன்ற போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது இயல்பு. அந்த தடையை மீறி உலகம் தமிழர்களின் உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருக்கும் நளினி பிரச்சினை, கருணை அடிப்படையில் சிந்திக்கப்பட வேண்டும். சோனியா மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சோனியா தான் நேரடியாக பாதிக்கப்பட்டவர். அவருக்கு கருணை எண்ணம் இருக்கிறது எ‌ன்று ‌வீரம‌ணி கூ‌றினா‌‌ர்.