அக்டோப‌ர் 1ஆ‌ம் தே‌தி முதல் தமிழக லாரிகள் கர்நாடகம் செல்லாது: செ‌ங்கோட‌ன் அ‌றி‌வி‌‌ப்பு!

சனி, 20 செப்டம்பர் 2008 (11:38 IST)
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த எதிர்ப்புத் தெரிவித்து தமிழக லாரிகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்துக்கு செல்லாது என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாம‌க்க‌லி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய சம்மேளனத் தலைவர் செங்கோடன், அக்டோபர் 1ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாத வாகனங்கள் மீது உயர் நீதிமன்ற ஆணயை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தை கடந்து செல்லும் 70,000 வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உதிரிபாகங்கள் விலை உயர்வு, கட்டுபடியாகாத லாரி வாடகை, வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் லாரி தொழில் கடும் நசிவடைந்து வரும் சூழலில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவது என்பது லாரி உரிமையாளர்களுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

எனவே, இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வரும் 1ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழக லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் விலக்கு அளிக்க கோரியும் தமிழக லாரிகளும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கர்நாடகம் செல்லாது. வேலைநிறுத்தம் துவங்கினால் சரக்குப் போக்குவரத்து துண்டிக்கப்படும். கோடிக்கணக்கில் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று செ‌‌ங்கோட‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்