தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள வானிலை நிலவரங்களையும் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் நிலவும் குறைந்தபட்ச வெப்பநிலை, அதிகபட்ச வெப்பநிலை, மழை அளவு, உள்ளூர் வானிலை நிலவரம் ஆகியவை பற்றி சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளும் வசதி அமலில் உள்ளது.
இந்த வசதி, நாடு முழுவதும் 200 நகரங்களில் நவீன முறையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 24 நகரங்களின் (மாவட்ட தலைநகரங்கள்) வானிலை நிலவரம், சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உடனுக்குடன் கிடைக்கும் வகையில் வானிலை தகவல் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள வானிலை நிலவரங்களையும் 1800 180 1717 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
கட்டணமில்லா தொலைபேசியில் பேசும்போது, பொதுமக்களுக்கு என்ன தகவல் வேண்டும் என்று கேட்டு, அதற்கேற்ப பதில் அளிக்கும் தொலைபேசி குரல் சேவை (ஐ.வி.ஆர்.எஸ்.) முறையில் வானிலை தகவல்கள் அளிக்கப்படும். தமிழ்நாட்டின் வானிலை தகவல் மட்டுமில்லாமல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நிலவும் வானிலை தகவல்களையும் இதே எண்ணில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.