சுற்றுலா தளமாக மாறியது பண்ணாரி கோவி‌ல்!

சனி, 20 செப்டம்பர் 2008 (10:19 IST)
ஈரோடு: பண்ணாரி கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் கட்டாயம் பண்ணாரி கோவிலுக்கு வந்துவிட்டு செல்வது குறிப்பிடதக்கது.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களில் பண்ணாரியும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் பங்குனியில் குண்டம் விழா சிறப்பாக நடக்கும். இதில் லட்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பர்.

கடந்த காலங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் முக்கிய விரதநாட்கள், பண்டிகை நாட்களில் மட்டும் பண்ணாரி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை காணமுடியும். ஆனால் தற்போது பண்ணாரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமெனில் தற்போது பண்ணாரி கோவில் ஒரு சுற்றுலா தலமாக மாறிவிட்டது. கொடிவேரி அணை, பவானிசாகர் அணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கமாக மாறிவிட்டது.

குறிப்பாக ஞாயிற்று கிழமை நாட்களில் பக்தர்கள் அதிகமாக கூடுகின்றனர். விடுமுறை நாள் என்பதால் அரசு அதிகாரிகளும் பள்ளி விடுமுறை என்பதால் சுற்றுப்பகுதி விவசாயிகளும் ஞாயிற்று கிழமைகளில் அதிகம் வர தொடங்கியுள்ளனர். ஞாயிற்று கிழமை நாட்களில் பண்ணாரி கோவிலின் தெப்பகுளம் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு செல்லும் நிகழ்வும் அதிகரித்துள்ளது.