தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ஒரு ரூபாய் அரிசி தரமானது அல்ல என்றும் இந்த விலை குறைப்பின் மூலம் அரிசி கடத்தல்காரர்கள்தான் 2 மடங்கு லாபம் அடைவார்கள் என்றும் பா.ஜ.க. தமிழக தலைவர் இல.கணேசன் குற்றம் சாற்றியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக 15 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் அல்லாத அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட பல கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம்.
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளதால் அவர்கள் என்னதான் இலவச திட்டங்களை அறிவித்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. விலைவாசி உயர்வு, மின்வெட்டு, டீசல் தட்டுப்பாடு, பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்வோம்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ஒரு ரூபாய் அரிசி தரமானது அல்ல. 2 ரூபாய் கொடுத்து அரிசி வாங்க முடியாத மக்கள் 50 ரூபாய் கொடுத்து மளிகை சாமான்கள் வாங்க முடியுமா? இந்த விலை குறைப்பின் மூலம் அரிசி கடத்தல்காரர்கள்தான் 2 மடங்கு லாபம் அடைவார்கள்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 26, 27ஆம் தேதிகளில் சேலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு கையாள வேண்டிய யுக்திகள் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இல.கணேசன் கூறினார்.