சத்தியமங்கலம் வனப்பகுதியில் கட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பண்ணாரி அருகே ரோட்டின் ஓரத்தில் சாதாரணமாக மேய்ந்துகொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்டது சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி மற்றும் டி.என். பாளையம் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் வனப்பகுதியில் காட்டுயானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகிறது.
webdunia photo
WD
கடந்த மே, ஜூன் மாதங்களில் பண்ணாரி அருகே நாள்தோறும் வனக்குட்டைக்கு காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்வதை பொதுமக்கள் பார்த்து ரசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக சாலைகளில் வனவிலங்குகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பண்ணாரி பகுதியில் மான் கூட்டங்களை காணமுடியும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பண்ணாரியில் இருந்து திம்பம் கொண்டை ஊசி பாதை தொடக்குவதற்கு இடையில் உள்ள சாலை ஓரங்களில் சாதாரணமாக காட்டெருமைகள் மேய்ந்து வருகிறது.
இது பழக்கப்பட்ட எருமைகள் என நினைத்து இவ்வழியாக வாகனத்தில் செல்பவர்கள் நின்று வேடிக்கை பார்த்தால் உடனே அது கத்திக்கொண்டு தாக்க வருகிறது. உடனே பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடுகின்றனர்.
இது குறித்து மாவட்ட வனஅதிகாரி எஸ்.ராமசுப்பிரமணியம் கேட்டபோது, தற்போது சத்தியமங்கலம் கோட்ட வனப்பகுதிகளில் நல்ல மழை பெய்து புல்கள் வளமாய் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக காட்டெருமை, யானை மற்றும் மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு பிரச்சனையின்றி சுதந்திரமாய் உள்ளது.
பண்ணாரி அருகே பெரும்பாலான நேரங்களில் மான் கூட்டம் மற்றும் கட்டெருமையை காணமுடியும். இதை பார்க்கும்போது பொது மக்கள் அதன் அருகே நின்று அதை அச்சுறுத்துவது, தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.