கண்டலேறு- பூண்டி கால்வாய் பணி : தமிழக அரசு விளக்கம்!
புதன், 17 செப்டம்பர் 2008 (17:42 IST)
கண்டலேறு- பூண்டி கால்வாய் பணிகள் முடிவடைந்து விட்டது என்றும் எஞ்சிய சுவர் அமைக்கும் பணி செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டம் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கண்டலேறு நீர்த்தேக்கத்தினை பூண்டி நீர்த்தேக்கத்துடன் இணைக்கும் கால்வாய் கண்டலேறு - பூண்டி கால்வாய் என அழைக்கப்படுகிறது. இக்கால்வாய் ஆந்திர மாநிலத்தில் 152.70 கி.மீ நீளமும், தமிழ்நாட்டில் 25.27 கி.மீ. நீளமும் உள்ளது.
இக்கால்வாயின் கட்டுமானப்பணிகள் யாவும் 1996 இல் முடிவடைந்து, அதுமுதல் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின்படி, ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான ஒப்பந்தத்தின் முதலாவது காலகட்டத்தில் 8 டி.எம்.சி மற்றும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான இரண்டாவது கால கட்டத்தில் 4 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் திட்டம் தொடங்கிய 1996-லிருந்து பிப்ரவரி 2007 வரை மொத்தம் 27.58 டி.எம்.சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் ஒப்பந்தத்தின் முதல் காலகட்டத்தில், 03.08.2007 முதல் 06.11.2007 வரை 4.60 டி.எம்.சி தண்ணீர் ஆந்திர அரசினால் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது காலகட்டமான ஜனவரி 2008 முதல் ஏப்ரல் 2008 முடிய உள்ள காலத்திற்கு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவு நீர் கையிருப்பு இருந்ததால் தண்ணீர் பெறப்படவில்லை. இதுவரை 32.18 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டுள்ளது.
கண்டலேறு - பூண்டி கால்வாயில் 13.50 கி.மீ. முதல் 21.50 கி.மீ. வரை கோண்டுவானா களிமண் தன்மையாலும், இரு கரைகளிலும் அதிகப்படி மண் மேடுறுத்தப்பட்டதாலும், கால்வாயின் பக்க சரிவுகளில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு, சீரான நீர்வரத்து பாதிப்படைந்தது. இதுபற்றி விபரம் அறிந்த ஸ்ரீ சத்ய சாய்பாபா அறக்கட்டளை, தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க, ஆந்திர எல்லையில் இக்கால்வாயை சீரமைத்தது போல, தமிழ்நாடு எல்லையில் பாதிப்படைந்த கண்டலேறு - பூண்டி கால்வாய், இணைப்பு கால்வாய் மற்றும் ஊட்டுக் கால்வாய் பகுதிகளை சீரமைக்க முன்வந்து, 14.05.2007 அன்று பணிகள் துவங்கப்பட்டன.
கண்டலேறு - பூண்டி கால்வாயில் மண் சரிவு ஏற்பட்டு மிகவும் பாதிப்படைந்த பகுதிகளான 0 மீட்டர் முதல் 700 மீட்டர் முடிய மற்றும் 13,500 மீட்டர் முதல் 21,500 மீட்டர் முடிய உள்ள பகுதிகளில் கால்வாயில் இருபக்க கரைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. இதே பகுதிகளில் கால்வாயின் முழு நீர் மட்டத்திற்கு கீழ் மண் சரிவினால் கட்டுமானம் பாதிப்படைந்த பகுதிகளில் 2324 மீட்டர் நீளத்திற்கு பக்கச் சுவர்கள் அமைக்கவும் 3500 மீட்டர் நீளத்திற்கு லைனிங் செய்யவும் திட்டமிடப்பட்டு பணிகள்யாவும் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், 700 மீட்டர் முதல் 13,500 மீட்டர் முடிய உள்ள பகுதியில் சிறு பழுதுபார்ப்புப் பணிகள் 2,000 மீட்டர் நீளத்திற்கு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. 21,500 மீட்டர் முதல் 25,275 மீட்டர் முடிய உள்ள பகுதியில் 30.09.2008க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சீரமைக்கப்பட்ட கரைகளில் கால்வாயின் முழு நீர் மட்டத்திற்கு மேல் கரை சரிவு பாதுகாப்பு பணியின் திட்ட இலக்கான 17,400 மீட்டர் நீளத்தில் 15,550 மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சுவர் அமைக்கும் பணி 30.09.2008க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவை தவிர ஊட்டுக் கால்வாயில் 4 இடங்களில் பழுதுபார்ப்புப் பணிகள் எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டதில் 2 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இணைப்புக் கால்வாயில் 3 இடங்களில் பழுதுபார்க்க திட்டமிடப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இத்துடன் ஸ்ரீ சத்யசாய்பாயா அறக்கட்டளை போரூர் ஏரி மற்றும் மாதவரம் ரெட்டை ஏரிகளை புனரமைக்கும் பணிகளையும் செயல்படுத்த இசைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.