ஆற்காடு வீராசாமி பதவி விலக வேண்டும்: பா.ம.க. ஆர்ப்பாட்டம்!
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (17:45 IST)
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டைக் கண்டித்தும், அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதவி விலகக் கோரியும் பா.ம.க. சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட தலைமையங்களிலும் பிற இடங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பா.ம.க.வினர் கலந்து கொண்டு அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர்.
மேலும் தமிழகம் இருளில் மூழ்கி உள்ளதை குறிப்பாக உணர்த்தும் பொருட்டு, மெழுகுவர்த்தி, சிமினி விளக்குகளை கொண்டு வந்தும் அமைச்சர் ஆற்காடு வீரசாமியின் செயல்படாத நிலையைக் கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர் கூறுகையில், மின்வெட்டுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கு, குறிப்பாக அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர் ஆற்காடு வீராசாமி தவறிவிட்டார் என்று குற்றம் சாற்றினார்.
இதற்கிடையே , மின்வெட்டைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கண்டித்தும் வணிகர் பேரவை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்துக் கடைகளும் வழக்கம்போல் திறந்தே இருந்தன.