சிறிலங்காவுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கவில்லை: தங்கபாலு!
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (17:22 IST)
சென்னை: ''சிறிலங்கா ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் வழங்குவதாக பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்கள். மத்திய அரசு ஆயுதம் எதுவும் சிறிலங்காவுக்கு வழங்கவில்லை'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெறுவது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் பேசி முடிவு எடுக்க உள்ளோம். இதில் எடுக்கும் முடிவை கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தி காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். இது தொடர்பாக இருகட்சி தலைமைகளும் இணைந்து பேசி விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வோம்.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றவும், அதனை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பரமத்தி வேலூரில் கிறிஸ்துவ ஆலயத்தை நேற்றிரவு இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஒரிசாவில் வன்முறைகளை அரங்கேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது தமிழகத்திலும் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
பா.ஜ.க.வும், அதனை சார்ந்துள்ள அமைப்புகளும் இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் தமிழக அரசு தலையிட்டு வன்முறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சிறிலங்காவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் செயற்குழுவில் பேசும்போது தெரிவித்தேன். எனது கோரிக்கையை ஏற்று சிறிலங்கா அரசுடன் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி பேசி தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் வழங்குவதாக பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்கள். மத்திய அரசு ஆயுதம் எதுவும் வழங்க வில்லை என்று தங்கபாலு கூறினார்.