தமிழகத்தில் பூரண மது விலக்கு: இல.கணேசன் வலியுறுத்தல்!
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (16:30 IST)
''தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள், இல்லையேல் 'கள்' இறக்கவாது அனுமதி அளியுங்கள்'' என்று தமிழக அரசை பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கொள்கை. ஆனால் தமிழக அரசு மதுவிற்பனை மூலம் வரும் வருமானத்துக்கு இலக்கு வைத்து விற்பனையை அதிகரிக்கின்றது. மது விற்பனைக்கு அனுமதி தந்தார்கள். பிறகு அரசே ஏற்று நடத்த முன் வந்தது. இந்த அரசு "பார்கள்' நடத்த அனுமதி தந்துள்ளது.
மதுவிலக்கு அமலில் இருந்த போது கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருந்தது என்பது ஏற்புடைய வாதம் அல்ல. கிரிமினல் சட்டங்கள் இருந்த போதும் கொலைகள் நடக்கின்றன என்பதால் சட்டமே தேவையில்லை என ஆகுமா? தமிழகத்தில் ஒரு தலைமுறை மதுக்கடைகளை கண்ணால் பார்த்ததே இல்லை. அச்சப்பட்டு ரகசியமாக குற்ற உணர்வுடன் குடித்தவர்கள் மதுவிலக்கு நீக்கப்பட்டவுடன் தாராளமாக தயக்கமின்றி குடிக்க துவங்கினார்கள்.
இந்த அரசின் மதுக்கொள்கை இரட்டை நிலைப்பாடானது. சீமைச் சரக்கை அரசே விற்பனை செய்கிறது. இதில் தனது பணத்தை அதிகம் செலவழித்து வாழ்க்கையை கெடுத்துக் கொள்வது விவசாயிகள் தான். சீமைச் சரக்கை விற்பனை செய்யும் தமிழக அரசு, தென்னை மற்றும் பனை விவசாயிகள் வாழ்வில் வளம் பெற 'கள்' இறக்கி விற்பனை செய்வதை அனுமதிக்குமானால் அந்த விவசாயிகள் வாழ்வும் வளம் பெறும்.
இன்றைய நிலையில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் திட்டத்துக்கு அரசு முக்கியத்துவம் தராமல் அவர்கள் வரவில்லாமல் செலவுகள் செய்து வருந்தி நிற்கின்ற நிலையினை உருவாக்குகிறது. எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள், இல்லையேல் 'கள்' இறக்கவாவது அனுமதி அளியுங்கள் என்கின்ற விவசாயிகளது கோரிக்கை நியாயமானது என்றே கருதுகிறேன்'' என்று இல.கணேசன் கூறியுள்ளார்.