குறை கூறிக்கொண்டே இருப்பதால் மக்கள் மாறிவிடமாட்டார்கள்: கருணாநிதி!
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (15:58 IST)
குறை கூறிக்கொண்டே இருப்பதால் மக்கள் மாறிவிடமாட்டார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
நியாயவிலைக் கடை களில் ரூ.50க்கு மளிகை சாமான் என்பது ஆளுங்கட்சியினருக்குத்தான் லாபம் என்று தேசிய முற்போக்குத் திராவிட கழகத் (தே.மு.தி.க.) தலைவர் விஜயகாந்த் கூறிய குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதுவும் செய்யாவிட்டால், அரிசி விலை ஏறி விட்டது, விலைவாசியைக் குறைக்கவில்லை என்றார்கள். கிலோ அரிசி விலையை ஒரு ரூபாய் என்று குறைத்தோம். உடனே அரிசி விலையைக் குறைத்தால் கடத்தலுக்குத் தான் அது பயன்படும் என்கிறார்கள்.
கடத்தல் செய்பவர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்தால், கடத்தல் பெருகி விட்டது, பார்த்தீர்களா என்கிறார்கள். விலைவாசியைக் குறைக்க நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை நியாய விலையில் தருவோம் என்றால், யாருக்குமே அந்தத் திட்டத்தினால் பயனில்லை என்றார்கள். தற்போது ரூ.50க்கு, ரூ.67 பெறுமானமுள்ள மளிகைப் பொருட்களைத் தருகிறோம் என்றால், அது ஆளுங்கட்சியினர் சம்பாதிக்கச் செய்யப்படும் வழி என்கிறார்கள்.
இப்படியெல்லாம் குறை கூறிக்கொண்டே இருப்பதால் மக்கள் மாறிவிடமாட்டார்கள். உண்மையிலேயே இதனை வாங்கி, அதன் மூலம் பயன் பெறுபவர்களுக்கு, புகார் கூறுபவர்கள் வேண்டுமென்றே தான் இப்படிப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இது வெறும் புகார் மட்டுமல்ல - வீண் புகார் - வீம்புப் புகார் என்றே கூறலாம்" என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.