இனப்படுகொலைக்கு மத்திய அரசு துணை போகிறது: வைகோ!
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (12:26 IST)
''சிறிலங்காவிற்கு இந்தியாவில் இருந்து ரேடார் கருவிகள், பைலட்டுகள், டெக்னீஷன்களை அனுப்பி இருப்பதன் மூலம் இனப்படுகொலைக்கு மத்திய அரசு துணை போய் உள்ளது'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ம.தி.மு.க. சார்பில் மதுரையில் நேற்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், '' வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் வெற்றிக்கொடி நாட்டிட மக்கள் சக்தியை திரட்டவும் இந்த மாநாடு நடக்கிறது. பெரும் யுத்தத்துக்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் இந்த யுத்தத்தில் அண்ணா தந்த அறிவு ஆயுதத்தை ஏந்தப்போகிறோம்.
முதலமைச்சர் கருணாநிதி அண்ணாவின் நூற்றாண்டு விழாவை ஏன் விழாவாக கொண்டாடவில்லை. செப்டம்பர் 15 தான் அண்ணாவின் பிறந்த நாள். அன்று தான் அவரது பிறந்த நாளை கொண்டாடவேண்டும். அதற்கு பதிலாக செப்டம்பர் 21-ல் விழா நடத்துவதா?
சிறிலங்காவில் தமிழர்களை கூண்டோடு அழிக்க திட்டமிட்டு விட்டனர். ஆனால் விடுதலைப்புலிகளை போரில் வெல்ல முடியாது. அவர்களை அழிக்க முடியாது. இது போன்ற அக்கிரமங்களை செய்த எத்தனையோ உலக நாட்டு தலைவர்கள் உலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ராஜபக்சேவை உலக நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய காலம் வரும்.
சிறிலங்காவிற்கு இந்தியாவில் இருந்து ரேடார் கருவிகள், பைலட்டுகள், டெக்னீஷன்களை அனுப்பி இருக்கிறீர்கள். இதெல்லாம் கூலிப்படை போல் வேலை செய்யவா? இதன் மூலம் இனப்படுகொலைக்கு மத்திய அரசு துணை போய் உள்ளது.
இந்த அக்கிரமங்களில் இருந்து தமிழகம் மீட்கப்படவேண்டும். மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் சக்தியை திரட்டுவோம். அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் கரம் கோர்த்துள்ளது. இது தொடரும். எப்போது தேர்தல் வந்தாலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்'' என்று வைகோ பேசினார்.