''ஐம்பது ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள் தருவது தமிழக அரசுக்கு ஆதாயமே தவிர நஷ்டம் அல்ல'' என்று தே.மு.தி. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 100-வது பிறந்தநாளையொட்டி ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். பிறகு காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
விலைவாசி உயர்ந்து வரும் வேளையில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.67-க்கு விற்கக் கூடிய மளிகை பொருட்களை, ரூ.17-ஐ குறைத்து ரூ.50-க்கு அரசு தரப்போவதாகவும் அதனால் 1 கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும், அதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 17 ரூபாய் மிச்சமாகிறது.
ஆனால், அரசு இந்த அறிவிப்பின் மூலம் ரூ.5 மட்டுமே உதவியாக தருகிறது. இது மக்களைப் பொறுத்தவரையில் பெருத்த ஏமாற்றம் தான். மேலும், அரசு குறிப்பிட்டுள்ள மளிகை பொருட்கள் மொத்த வியாபாரியிடம் கொள்முதல் செய்தால், ரூ.45.70-க்கே பெற முடியும் என்று விசாரித்ததில் தெரிகிறது.
அதுவும் கிலோ கிராம் அடிப்படையில் இந்த கணக்கு அமைந்துள்ளது. டன் கணக்கில் அரசு கொள்முதல் செய்யும் பொழுது இந்த விலை மேலும் குறையும். வியாபாரிகளை போல அரசு மதிப்பு கூட்டு வரி மற்றும் இதரவரிகளைச் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இதன்படி பார்த்தால் ரூ.50-க்கு தருவது என்பது கூட அரசுக்கு ஆதாயமே தவிர நஷ்டம் அல்ல.
உண்மையிலேயே ஏழைகளுக்கு உதவவேண்டும் என்றால் அரசு வீண் விரயங்களை தவிர்த்தாலே விலைவாசி பெருமளவுக்கு குறையும். அதோடு ஏழைகளை பாதுகாக்க குடும்ப நிதியுதவி அளிப்பதே அரசின் கடமையாகும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.