வசதியில்லாதவர்களும் தொழில்கல்வி பயில வேண்டுமென்ற அக்கறையோடுதான் அரசு சார்பில் 7 புதிய கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை வசதி படைத்தவர்களுக்கே வாழ்வளிக்கிறது. 2 ஆண்டு காலத்தில் அதிக கல்லூரிகள் தொடங்கப்படவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொறியியல் கல்லூரிக்கான கட்டணம் தி.மு.க. ஆட்சி வருவதற்கு முன்பு மாணவர் ஒருவருக்கு ரூ.12,500 என்று இருந்ததை ரூ.7,500 என்று குறைத்தது வசதி படைத்தவர்களுக்குத்தான் என்று ராமதாஸ் சொல்லுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 7 புதிய கலைக்கல்லூரிகள் ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய சிறிய ஊர்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, திருக்குவளை, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய சிறிய ஊர்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு சார்பில் 3 மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டு மட்டும் தொடங்கப்படுகின்றன.
இவையெல்லாம் வசதி படைத்தோருக்காக செய்யப்படுகிற செயல்களா, வசதியில்லாதவர்களும் தொழில்கல்வி பயில வேண்டுமென்ற அக்கறையோடு தான் அரசு சார்பில் இத்தனை கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன என்பதை டாக்டர் ராமதாஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் இரண்டும் மத்திய அரசின் கீழ், குறிப்பாக மத்திய அமைச்சர் அன்பு மணியின் பொறுப்பிலே உள்ளவர்களால் அனுமதி அளிக்கப்படக் கூடியவையாகும். தனியாருக்குத் தரக்கூடாது என்பது அவர்களின் எண்ணமாக இருக்குமேயானால், அவர் அன்புமணியிடமே கூறி அதனைத் தடுத்திருக்கலாம்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.