கல்வி நிறுவன வாகனங்களுக்கு மஞ்சள் நிற வர்ணம்: தமிழக அரசு உத்தரவு!
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (17:49 IST)
கல்வி நிறுவன வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் மஞ்சள் நிற வர்ணம் பூசி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,"மாணவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, கல்வி நிறுவன வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்பு வர்ணம் கொண்டு இருத்தல் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த 9ஆம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில், ஒவ்வொரு கல்வி நிறுவன பேருந்தும் முழுவதுமாக மஞ்சள் நிறம் கொண்டு பூசியிருத்தல் வேண்டும்.
பள்ளிப் பேருந்து அல்லது கல்லூரிப் பேருந்து என்ற வாசகத்தை வாகனத்தின் முன்புறமும், பின்புறமும் தெளிவாக தெரியும்படி எழுதப்பட வேண்டும்.
வாகனத்தில் பக்கவாட்டில் இருபுறங்களிலும் 60 செ.மீ. விட்டம் கொண்டுள்ள வட்டத்தில், 20 செ.மீ. விட்டத்தில் கருநீல வர்ணத்தில் மஞ்சள் நிற பின்புறத்தில் சின்னம் எழுதப்பட வேண்டும்.
தற்போதுள்ள கல்வி நிறுவன பேருந்துகள் அனைத்தும் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும் காலத்தில் அரசாணையில் கண்டுள்ளப்படி வர்ணம் பூசப்பட வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோர் இந்த நீதிமன்ற வழிகாட்டுதலையும், அரசு உத்தரவினையும் தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.