மின்சாரத் துறையில் ஜெயலலிதா செய்த சாதனைகள் குறித்து ஒரே மேடையில் புள்ளி விவரங்களுடன் நான் விவாதிக்க தயார்? அதற்கு விஜயகாந்த் தயாரா? என்று முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் விசுவநாதன் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் காற்றாலை திட்டத்தை நம்பியதே தற்போதைய மின்வெட்டுக்கு காரணம் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் விஜயகாந்த் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் உச்சபட்ச மின்சாரத் தேவை 8,775 மெகாவாட் என்ற நிலையில் 10,011 மெகாவாட் அளவுக்கு தமிழகத்தில் மின்சார உற்பத்தித் திறன் இருந்தது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் மிகை மாநிலமாகவும் இருந்தது.
இந்த 10,011 மெகாவாட் மின் உற்பத்தியில் காற்றாலையில் இருந்து பெறப்படும் மின்சாரம் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பதை விஜயகாந்த் தெரிந்து கொள்ள வேண்டும். காற்றாலை மின்சாரம் என்பது ஒரு கூடுதலான ஏற்பாடுதான். இந்த கூடுதல் காற்றாலை மின் உற்பத்தியிலும் அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம் வகித்தது. இதற்காக தேசிய விருதும் கிடைத்தது.
இந்த அடிப்படை விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருப்பது அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது.
அ.இ.அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியில் 3,430.75 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவுத்திறன் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. தற்போது அனல் மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாததாலும், மத்திய தொகுப்பில் இருந்து நமக்குள்ள உரிமையை கருணாநிதி கேட்டுப் பெறாததாலும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதையும் விஜயகாந்த் புரிந்துக் கொள்ள வேண்டும்.
எனவே மின் தட்டுப்பாட்டுக்கு அ.இ.அ.தி.மு.க மீது பழி போடுவதை விஜயகாந்த் நிறுத்திக் கொள்ள வேண்டும். மின்சாரத் துறையில் ஜெயலலிதா செய்த சாதனைகள் குறித்து ஒரே மேடையிலோ அல்லது பத்திரிகையாளர்கள் முன்னிலையிலோ புள்ளி விவரங்களுடன் நான் விவாதிக்கத் தயார். அதற்கு விஜயகாந்த் தயாரா? என்று விசுவநாதன் சவால் விடுத்துள்ளார்.