காவிரி ஆற்‌றி‌ல் படகு க‌வி‌ழ்‌ந்து இருவ‌ர் ப‌லி!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (12:26 IST)
காவிரி ஆற்றை பரிசலில் கடக்கும்போது தண்ணீரில் மூழ்கி இருவர் இறந்தனர்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே காவிரி ஆற்றின் கரையில் உள்ளது பாசூர். இதன் மறுகரையில் உள்ளது சோழசிராமணி கிராமம். இது நாமக்கல் மாவட்ட‌த்திற்கு உட்பட்டதாகும். இந்த இரு கிராம மக்கள் காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்து இரு கிராமங்களுக்கும் செல்வது வழக்கம்.

பள்ளி குழந்தைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இந்த படகு பயணம்தான். இதற்காக இப்பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட படகு செயல்பட்டு வருகிறது. நேற்று சோழசிராமணி கிராமத்தில் பல்வேறு திருமணங்கள் இருந்ததாலும், வாரசந்தை கூடியதாலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

ஒரு படகில் இரு ச‌க்கர வாகன‌ம் உ‌ள்பட 13 பே‌ர் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென பலமான காற்று வீசியது. இதனால் படகை இயக்க சொக்கப்பன் சிரமப்பட்டார்.

அப்போது உயிர்பிழைக்க விவசாயி சோமசுந்தரம் (55), சின்னதம்பி (52) ஆகியோர் ஆற்றில் குதித்தனர். சில பெண்களும் குதித்தனர். இதைபார்த்த பலர் வேறு படகு எடுத்து வந்து தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிலரை காப்பாற்றினர்.

இதில் விவசாயிகள் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். சம்பவம் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வித்யாகுல்கர்னி, திருச்சங்கோடு உதவி ஆட்சியர் முத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்