தமிழகத்தில் உணவு பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (12:08 IST)
தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் ரூ.500 கோடியில் மெகா உணவுப் பூங்காக்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
11-வது ஐந்தாண்டு காலத்தில் 30 மெகா உணவுப் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.500 கோடி செலவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 மெகா உணவுப் பூங்காக்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் பங்களிப்புடன் கூட்டுத் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 50 விழுக்காடு மானியமாக வழங்கும்.
இந்தத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்களை பதப்படுத்த நவீன உள் கட்டமைப்பு, பரிசோதனைக் கூடங்கள், சேமிப்புக் கிடங்கு போன்ற வசதிகள் செய்யப்படும்.