அம்பத்தூர் முன்னாள் நகராட்சி தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
வியாழன், 11 செப்டம்பர் 2008 (17:44 IST)
ஆள் மாறாட்டம் செய்து ரயில்வேயில் வேலை வாங்கி மோசடி செய்த வழக்கில், அம்பத்தூர் நகரமன்ற முன்னாள் தலைவர் ருக்மாங்கதனுக்கு சென்னை மா.பு.க சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை, அம்பத்தூர் நகராட்சித் தலைவராக பதவி வகித்தவர் ருக்மாங்கதன். இவரது தாய் மாமா ராமசாமி. இவர் ரயில்வேயில் கலாசி வேலைக்கு சேர்ந்தார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வுபெற்ற பிறகு அவரை தன்னுடைய தந்தை என்று போலி சான்றிதழ் தயாரித்து வாரிசு அடிப்படையில் ருக்மாங்கதன் கலாசி வேலை வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
அப்போது, தெற்கு ரயில்வேயிடம் சம்பளம் வாங்கி ரூ.8 லட்சத்துக்கு மேல் மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டது. இந்த புகார் அடிப்படையில் ருக்மாங்கதன் மீது சி.பி.ஐ. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள ம.பு.க சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சரோஜினிதேவி நேற்று தீர்ப்பளித்தார்.
அப்போது, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து, ருக்மாங்கதனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்தார்.