சென்னை: காற்றாலை மின் உற்பத்தி பெருக்கத்தால் தமிழகம் முழுதும் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் தடை முடிவுக்கு வருகிறது.
ஞாயிறு முதலே சென்னை மற்றும் புற நகர்ப்பகுதிகளில் மின் தடை நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
செவ்வாய் மாலைவாக்கில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அந்த நாள் முழுதுமே காற்றாலை மின் உற்பத்தி 1,000 மெகாவாட் முதல் 1.500 மெகாவாட் வரை இருந்ததாக தமிழ் நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஞாயிறன்று காற்றாலை மின் உற்பத்தி 1,850 மெகாவாட்டாக இருந்தது என்று இந்திய காற்றாலை மின் சக்தி கூட்டமைப்பு துணைத் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.
செவ்வாய் நண்பகல் 12.30 மணியிலிருந்து மின் தடை நிறுத்தப்பட்டது. காலை 6 மணி முதல் 12.30 மணி வரை 500 மெகாவாட் அளவிற்கு மின்தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னேற்றங்களுக்கிடையிலும் கேரளாவிடமிருந்து தொடர்ந்து 100 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் மின் உற்பத்தி மிகவும் மோசமாக உள்ளது அதிகாரிகளிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. 340 மெகாவாட் மின்சாரம் மட்டுமே நெய்வேலியிலிருந்து கிடைத்து வருகிறது.
அரசும், மின்சார வாரியமும், அதிக மின் உற்பத்திக்காக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனை வலியுறுத்தி வருகின்றன.