எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நுண்திறன் பயிற்சி மையம் அமைக்க ஒப்பந்தம்!
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (17:05 IST)
இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நுண்திறன் பயிற்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துடன் தமிழக சுகாதாரத்துறை செய்துள்ளது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள எலும்பு மூட்டு சிகிச்சை துறை 300 படுக்கை கொண்ட மையமாகும். இங்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இங்கு இளநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மட்டுமல்லாமல் சுமார் 50 முதுநிலை எலும்பு மூட்டு பயிற்சி மருத்துவர்கள் பயின்று வருகிறார்கள். இங்கு எலும்பு வங்கி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
மேலும் இத்துறையை வலுப்படுத்துவதற்காக எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நுண்திறன் பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதுநிலை பயிற்சி மருத்துவர்களும், இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களும் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை அளிப்பதில் தங்கள் நுண்திறனை வளர்த்துக் கொள்ளவும், இதனால் நோயாளிகள் மேலும் தரமான அறுவை சிகிச்சை பெற வழி வகுக்கும்.
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைத்துறையின் இன்றைய அதிநவீன தொழில் நட்ப வளர்ச்சியினால் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பது பெரும் சவாலாக உள்ளது. வகுப்பறை பாடங்கள், செய்முறை மருத்துவ பாடத்திட்டத்தோடு இந்த நுண்திறன் பயிற்சி மிகவும் அத்தியாவசியமாகிறது. இதனால் பயிற்சி மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் இந்த பயிற்சி மையத்தில் அந்த குறிப்பிட்ட அறுவை சிகிச்சை முறையை எலும்பு மாதிரியைக் கொண்டு பல முறை பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மையத்தில் தமிழகத்தின் அனைத்து எலும்பு மூட்டு பயிற்சி மருத்துவர்களும் மற்றும் இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களும் பயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.
இந்த மையத்தில் குறிப்பாக முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, தண்டுவட அறுவை சிகிச்சை, விபத்தினால் ஏற்படும் எலும்பு முறிவு சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு செய்முறைப் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணரின் நுண்திறன் மேலும் சிறப்படையும்.
இது தவிர இம்மையத்தில் சிறப்பு விரிவுரைகள், வீடியோ கான்பரன்சிங், அறுவை சிகிச்சை நேரடி ஒளிபரப்பு, கூட்டு ஆலோசனை ஆகியவற்றின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இங்கு சிறந்த ஒளி, ஒலி, மல்டி மீடியா மற்றும் கணிப்பொறி வசதிகள் கூடிய ஆறு பணிக்கூடங்கள் நிறுவப்படும்.
இந்த மையம் அமைவதன் மூலம் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை பயிற்சியில் உள்ள இடைவெளி நீங்கும். இதுபோன்ற மையம் மருத்துவத்துறை மற்றும் தனியார் நிறுவன கூட்டு முயற்சியுடன் ஒரு அரசு மருத்துவமனையில் அமைக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.பொதுத்துறை தனியார் கூட்டு முயற்சிகள் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டாலும், மருத்துவத்துறையில் இதுபோன்ற கூட்டு முயற்சிகள் மிகவும் அரிது.
இந்த புதிய கூட்டு முயற்சி மருத்துவமனையில் மேலும் இது போன்ற பல கூட்டு ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். டெப்யு ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் செயற்கை மூட்டுகள் மற்றும் எலும்பு மூட்டு சிகிச்சை உபகரணங்கள் தயாரிப்பதில் உலகத்திலேயே ஒரு முன்னோடியான நிறுவனமாகும். இந்த நிறுவனம் சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கள் சொந்த செலவிலேயே இந்த நுண்திறன் பயிற்சி மையத்தை சென்னை அரசு பொது மருத்துவமனையில் நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது.