பிணை நிபந்தனையை எதிர்த்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு!
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (11:41 IST)
சென்னை: முன்பிணை பெறுவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனை முறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் இன்று கோர்ட்டுகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
முன்பிணை பெறுவதற்கு ஒருநபர் பிணை அல்லது இருநபர் பிணை வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடுவது வழக்கம். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இந்த பிணையை வழங்கி சரண் அடைந்து முன்பிணை பெறலாம் என்றும் அல்லது காவல்துறையில் இருநபர் பிணை வழங்கலாம் என்றும் நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பித்து வந்தன.
சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளையானது முன்பிணை பெறுவதற்கு நபர் பிணை வழங்குவது தொடர்பாக வழங்கிய தீர்ப்பில், சம்பந்தப்பட்ட காவல்துறையில் மட்டுமே இந்த பிணை வழங்க வேண்டும் என்றும் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும்போது சிறை அதிகாரிகளிடம் சான்று பெறவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் இன்று நீதிமன்றங்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே உள்ள பழைய முறையையே அமல்படுத்த கோரி தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியை நேற்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், செயலாளர் வேல்முருகன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர்.