வரலாறு தெரியாமல் விஜயகாந்த் பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம்!
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (10:12 IST)
வரலாறு தெரியாமல், விவரம் அறியாமல் விஜயகாந்த் பேசுகிறார் என்று, முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்சார உற்பத்திக்கு திட்டம் தீட்டவில்லை என்று கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் குற்றம் சாட்டியிருக்கிறார். இது அவரின் அறியாமையையும், முதிர்ச்சி இன்மையையுமே எடுத்துக்காட்டுகிறது.
2001-2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 500 மெகாவாட் மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் என்று ஜெயலலிதா அறிவித்ததாகவும், ஆனால், 310 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சார உற்பத்தி உயர்த்தப்பட்டதாகவும் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். மனம்போன போக்கில், வரலாறு தெரியாமலும், விவரம் அறியாமலும் பேசும் விஜயகாந்திற்கு எனது கண்டனத்தை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மின்சார தட்டுப்பாடு என்பதே கிடையாது. இதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு மிகை மாநிலமாக வளர்ச்சி பெற்றது. இதுதவிர, உபரி மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு அதன் மூலமாகவும் தமிழ்நாட்டிற்கு வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
உண்மை நிலைமை இவ்வாறு இருக்க, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் விஜயகாந்த், நாட்டு நடப்பை பற்றி தெரிந்துகொள்ளாமல், சினிமாவில் தனது முழு நேரத்தையும் செலவிட்டுக்கொண்டு, இடைவெளியில் பொழுதுபோக்கிற்காக இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, பேசியிருப்பதன் மூலம், அவருடைய முகத்தில் அவரே கரியை பூசிக்கொண்டிருக்கிறார்'' என்று விஸ்வநாதன் கூறியுள்ளார்.