ரூ.150 கோடியில் மதுரை அரசு மருத்துவமனை உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும்: அன்புமணி!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (17:03 IST)
ரூ.150 கோடியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு இணையாக இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடு முழுவதும் 6 மருத்துவமனைகள் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு இணையாக உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றியமைக்கப்பட உள்ளன. இதில் முதல் மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை இருக்கும்.
அரசு ராஜாஜி மருத்துவமனையிலுள்ள மண்டல புற்றுநோய் பாதுகாப்பு மையத்திற்கு தேவையான அதிநவீன மருத்துவ கருவிகள் வழங்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய புற்றுநோய் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கருவிகள் வாங்குவதற்காக ரூ.12 கோடி செலவிடப்பட உள்ளது.
வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படும்.
மேலும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து புகையிலை தயாரிப்புப் பொருட்களிலும் அதன் அட்டையில் புகையிலை குறித்த எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் மருத்துவர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்று அன்புமணி கூறியுள்ளார்.