ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம்: சென்னையில் 15ஆம் தேதி கருணாநிதி தொடங்கி வைக்கிறார்!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (16:58 IST)
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வரும் 15ஆம் தேதி கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். 16ஆம் தேதி மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.
PTI Photo
FILE
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கிலோ அரிசி 1 ரூபாய் விலையில் வழங்கும் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டு நாளாகிய வரும் 15ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
அதன்படி சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 15ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில், கிலோ அரிசி 1 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
வரும் 16ஆம் தேதி அன்று சென்னை மாவட்டத்திலுள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளிலும், தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் விழாக்களில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், தமிழக அமைச்சர்களும், சென்னை மாநகர மேயரும் கலந்து கொண்டு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள்.
webdunia photo
FILE
சென்னை துறைமுகத்தில் நிதித்துறை அமைச்சர் அன்பழகன், அண்ணாநகர், புரசைவாக்கத்தில் ஆற்காடு வீராசாமி, ஆயிரம் விளக்கு, சேப்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின், எழும்பூர், பூங்காநகரில் பரிதி இளம்வழுதி, பெரம்பூரில் கே.பி.பி.சாமி, தியாகராயநகரில் மேயர் சுப்பிரமணியம், சைதாப்பேட்டை, மயிலாப்பூரில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திருவல்லிக்கேணியில் திட்டக் குழு துணைத் தலைவர் மு.நாகநாதன், ராயபுரத்தில் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.