அரசு கேபிள் டி.வி வெற்றி பெறவில்லை: கோ.க.ம‌ணி!

திங்கள், 8 செப்டம்பர் 2008 (11:37 IST)
நெல்லை : ''மக்கள் எதை விரும்புகிறார்களோ அந்த நிறுவனத்தின் மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கட்டும். அரசு நடத்தும் கேபிள் டிவி திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பது வருந்தத்தக்கது'' என்று பா.ம.க தலைவர் கோ.க.மணி கூறினார்.

webdunia photoFILE
நெல்லையில் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேச‌ிய அவ‌ர், தமிழகத்தில் மின் வெட்டால் மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிப்பு, பெண்களின் சமையல் பணிகள் முடக்கம், இரவில் தூக்கமின்மை, கொசுத்தொல்லை, விவசாயம், தொழிற்சாலை களில் உற்பத்தி பாதிப்பு, முதலீட்டாளர்களுக்கு பணநஷ்டம், தொழிலாளர்களுக்கு வேலையின்மை என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சுயநிதி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் நன்கொடை, கட்டண உயர்வுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கை பாரபட்சமாக உள்ளது. இந்நிலை நீடித்தால் கட்சிகளுடன் சேர்ந்து பெற்றோர்கள், மாணவர்கள் கல்வி புரட்சியில் ஈடுபடுவர்.

அரசு கேபிள் டி.வி தொடங்க வேண்டும் என்று முதன்முதலில் யோசனை கூறியது பா.ம.க. தான். இதற்காக தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை அழித்து, அரசு கேபிள் டிவி நடத்த வேண்டும் என்பது அல்ல.

தனியாரும், அரசும் கேபிள் நடத்தட்டும். மக்கள் எதை விரும்புகிறார்களோ அந்த நிறுவனத்தின் மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கட்டும். அரசு நடத்தும் கேபிள் டிவி திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பது வருந்தத்தக்கது எ‌ன்று கோ.க.மணி கூறினார்.