சிறிலங்க அரசை வற்புறுத்த வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!
ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (13:51 IST)
"தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தும்படி சிறிலங்க அரசை வற்புறுத்த வேண்டும்" என்று முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கக் கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது குறித்தும் தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உங்களுக்கு பலமுறை நான் கடிதம் எழுதியிருப்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து அவர்களது வேதனையை உங்களிடம் நேரிலும் தெரிவித்திருக்கிறேன்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்ட பிறகும் அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்ற அச்சத்தால் அவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லவே அச்சப்படுகிறார்கள். இந்திய கடல் எல்லைக்கு அருகிலேயே இந்த தாக்குதல் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் சிறிலங்க அரசு தாக்குதல் நடத்தியதை மறுத்து வருகிறது.
2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை 27 முறை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் 24 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். 342 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சமீபத்தில் நடந்த தெற்காசிய நாடுகள் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டிலும் நீங்கள் சிறிலங்க அதிபரிடம் எடுத்துக் கூறினீர்கள்.
ஆனால் அந்த மாநாடு நடந்த பிறகும் கூட 9.8.2008 அன்று 10 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 4.9.2008 அன்று நாகை மீனவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தார். இந்த தாக்குதல் குறித்து சென்னையில் உள்ள சிறிலங்க தூதர் அலுவலகத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்தது. இந்திய அரசும் சிறிலங்க அரசிடம் தெரிவித்தது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்கிறது.
4.9.2008 அன்று கோடியக்கரையில் சேது சமுத்திரம் திட்டப்பகுதி அருகே நாகை மீனவர் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் காயம் அடைந்த ஒரு மீனவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திய கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்தபோது இந்திய கடற்படையினர் காட்டும் பரிவை போல சிறிலங்க கடற்படையினர் நடந்து கொள்வது இல்லை.
எந்த முன்னறிவிப்பும் இன்றி சிறிலங்க கடற்படையினர் தாக்குதல் நடத்தி தமிழக மீனவர்கள் உயிரை பறிப்பது சர்வதேச கடல் விதிகளை மீறும் செயல் என்பதை, இந்த பிரச்சினையில் தலையிட்டு சிறிலங்க அரசிடம் தெரிவியுங்கள்.
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தும்படி சிறிலங்க அரசை வற்புறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.