இஸ்லாமிய தீவிரவாதமா? ஜெயலலிதா மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்!
சனி, 6 செப்டம்பர் 2008 (09:30 IST)
''ஜெயலலிதா இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறியிருந்த கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்'' என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் பொதுசெயலர் அப்துல்ஹமீது, துணைத்தலைவர் பக்கீர் முகமது அல்தாபி, முஸ்லிம் மக்களை வேதனை அடைய செய்யும் வகையில் ஜெயலலிதா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் காஷ்மீரில் இஸ்லாமிய மத தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பண்டிட்களுக்கும் நிவாரண உதவி வேண்டும் என்று அதில் கூறியிருக்கிறார். காஷ்மீரில் நடப்பது ஏன் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சாயம்பூச வேண்டும்.
இஸ்லாத்துக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. அங்குள்ள தீவிரவாத குழுக்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பவுத்தர்கள் என்ற வேறுபாடு இல்லை. முஸ்லிம்கள்தான் அங்கு அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே, ஜெயலலிதா இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறியிருப்பதை முஸ்லிம் மக்கள் சார்பிலும், தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்து, திரும்ப பெறாவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.