தமிழகத்துக்கு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம்: மத்திய அரசு ஒப்புதல்!
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (11:21 IST)
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையை சமாளிப்பதற்காக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி சென்ற தமிழக மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மின்வாரிய தலைவர் மச்சேந்திர நாதன் ஆகியோர் மத்திய மின்சார துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நிலக்கரி துறை அமைச்சர் சந்தோஷ் பக்ருடியா ஆகியோரை சந்தித்து, தமிழகத்தில் நிலவும் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்குமாறு வலியுறுத்தினார்கள்.
அப்போது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி தமிழகத்துக்கு 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று மத்திய மின்சார துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஷிண்டே, தமிழகத்துக்கு 300 மெகாவாட் மின்சாரம் அளிக்க ஒப்புக் கொண்டார்.
இதேபோல் மத்திய அமைச்சர் சந்தோஷ் பக்ருடியாவை சந்தித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, உடனடியாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க பக்ருடியா உத்தரவிட்டதோடு, வருகிற 10ஆம் தேதி முதல் மேலும் 200 மெகாவாட் மின்சாரம் அளிக்கவும் சம்மதம் தெரிவித்தார். மொத்தத்தில் தமிழகத்துக்கு 600 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.