சேலம் உருக்காலையின் ரூ.1,750 கோடி விரிவாக்க பணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று அடிக்கல்!
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (10:09 IST)
சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று சென்னை வருகிறார்கள். பின்னர் ரூ.1,750 கோடியில் உருவாகும் சேலம் உருக்காலையின் 2ஆம் கட்ட விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. ரூ.75 கோடி செலவில் கட்டப்படும் புதிய மையங்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டி நூல்களை வெளியிடுகிறார்கள்.
விழாவில், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங், முதமைச்சர் கருணாநிதி, சோனியா காந்தி ஆகியோருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது.
பிரதமர் வருகையையொட்டி 10,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சென்னை நிகழ்ச்சிக்குப்பின், சேலம் உருக்காலையில் ரூ.1750 கோடி மதிப்பில் 2-ம் கட்ட விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றிய முழு விவரம் நேற்று வெளியிடப்பட்டது.
டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம், காலை 8 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் புறப்படுகிறார். அவர், விமானத்திலேயே சிற்றுண்டி சாப்பிடுகிறார். சென்னை விமான நிலையத்தை 10.45 மணிக்கு வந்தடைகிறார்.
காலை 10.50 மணிக்கு, கார் மூலம், சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்கு செல்கிறார். அங்கு 11.15 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து 12.35 மணிக்கு, ஐ.ஐ.டி. வளாகத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
அங்கு 12.50 மணி முதல் 1.20 மணி வரை நடைபெறும் அபோலோ ரீச் மருத்துவமனை தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு, ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து, 1.25 மணிக்கு புறப்பட்டு 1.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையை அடைகிறார்.
அங்கு 1.30 மணி முதல் 2.20 மணி வரை அவர் ஓய்வெடுப்பார். அங்கேயே மதிய உணவு சாப்பிடுகிறார். பின்னர், அங்கிருந்து, 2.25 மணிக்கு கார் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு புறப்படுகிறார்.
சென்னை விமான நிலையத்தை 2.35 மணிக்கு சென்றடையும் அவர், அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் 2.40 மணிக்கு சேலம் புறப்படுகிறார். 3.30 மணிக்கு சேலம் விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து காரில் 3.35 மணிக்கு புறப்பட்டு, சேலத்தில் விழா நடக்கும் இடத்துக்கு சரியாக 4 மணிக்கு செல்கிறார்.
மாலை 4 மணி முதல் 5.15 மணி வரை நடைபெறும், சேலம் உருக்காலை விரிவாக்க திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
அதன்பிறகு, 5.20 மணிக்கு புறப்பட்டு 5.45 மணிக்கு சேலம் விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து 5.50 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு, இரவு 8.50 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.