அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவையை 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று தொடங்கப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்திருந்த நிலையில்- "மத்திய அரசு அதிலே என்ன செய்யப் போகிறது? என்பதை 23-11-1992க்குள் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்காக மத்திய அரசு தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தைக் கூட்டியது. அந்தக் கூட்டத்தை பா.ஜ.க.வும், விஸ்வ இந்து பரிஷத்தும் புறக்கணித்தன.
அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா என்ன பேசினார் என்பதை "தினமணி'' நாளேடு (24-11-1992) அன்று வெளியிட்டிருந்தது. அது வருமாறு:
"பெரும்பான்மையினராக உள்ளவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை அதே அளவில் சிறுபான்மையினராக உள்ள குடிமக்களும் அனுபவிக்கும் வகையில் நம்முடைய நடைமுறைகள் அமைய வேண்டும் என்ற பொறுப்பை நமது அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மை நமக்குத் தந்துள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல், சரித்திர, சமூக அமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிறுத்தி செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல.
இந்த நாட்டில் பெரும்பான்மை வகுப்பு இந்துக்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அவர்கள் தங்களுடைய மதச்சார்பான லட்சியங்களை அரசியல் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு மாறுபடாத வகையில் அமைதியான வழியில் நிறைவேற்றிக் கொள்ள முயன்றால் அதனை அனுமதிக்க வேண்டும்.
பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான்மையினரைப்போல அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்.
அயோத்தி பிரச்சனையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி கட்டுமானப்பணியை நிறைவேற்ற அனுமதிப்பதாகும்.
உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணைகளும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஒருவிதமான சட்டச் சூழலை உருவாக்கியிருப்பதை நான் அறிவேன். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவையோ அல்லது வேறுவித நடவடிக்கையோ மேற்கொள்வது கடினமாக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கட்டுமானத்துக்குத் தடை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், கட்டுமானப் பணிக்குத் தடையாக உள்ள சட்டச் சிக்கல்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் மேற்கொண்டாக வேண்டும். சட்டச் சிக்கல் இருப்பதையே இந்தப் பிரச்சனையில் முடிவு எடுப்பதை ஒத்திப் போடுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது.
ஏனெனில் கட்டுப்பட மறுக்கும் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை எதிர்கொள்வது ஒவ்வொரு நாளும் நகர நகர அரசுக்குப் பெரும் கடினமாக அமையும். எனவே கரசேவை நடைபெறுவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கத் தேவையான முடிவை இந்த அமைப்பு எடுக்க வேண்டியுள்ளது.
கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுக தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டுகோளைத் தெரிவிக்கிறேன். உத்தரபிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்."
இப்படியெல்லாம் கரசேவை பற்றி அதற்காகவே நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவிலே பேசியவர்தான், தற்போது இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பதைப் போல கரசேவையா, நானா ஆதரித்தேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். அவரது பேச்சு வெளிவந்த "தினமணி'' இன்றளவும் உள்ளது.