தினமலர் ஆசிரியர், பதிப்பாளரைக் கைது செய்யத் தடை!
புதன், 3 செப்டம்பர் 2008 (15:25 IST)
நபிகள் நாயகத்தைக் கேளி செய்து தினமலர் நாளிதழில் கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளதாக வேலூரைச் சேர்ந்த இஸ்லாமிய இயக்கம் கொடுத்துள்ள புகாரில், அந்நாளிதழின் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோரைக் கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் நாளிதழின் வேலூர் பதிப்பில் கடந்த 1 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த கார்ட்டூனில் நபிகள் நாயகம் கேளி செய்யப்பட்டிருந்ததாகக் கூறி, நேற்று அந்நாளிதழின் அலுவலகம் முன்பு இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நபிகள் நாயகத்தைக் கேளி செய்ததன் மூலம் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ள தினமலர் நாளிதழின் ஆசிரியர், பதிப்பாளரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய இயக்கம் ஒன்றின் சார்பில் நேற்றிரவு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கேட்டு தினமலர் நாளிதழின் ஆசிரியர் ஆர்.ராகவன், பதிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "குறிப்பிட்ட கார்ட்டூன் போன்றவை இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு வெளியிடப்படுவதாகவும், இதில் தங்களுக்கு எந்தவிதமான தவறான நோக்கமோ அல்லது எந்த மதத்தினரையும் புண்படுத்த வேண்டுமென்ற எண்ணமோ கிடையாது." என்று கூறியுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி, முன் ஜாமீன் மனுவின் மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தினமலர் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோரைக் கைது செய்யக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், அடுத்த விசாரணையை 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.