கேபிள் டி.வி. உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு: கருணாநிதிக்கு வரதராஜன் கடிதம்!
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (10:20 IST)
கேபிள் டி.வி. உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் சேனலை பெற்று, தொழில் செய்வதற்கு உரிய வாய்ப்பையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் என்.வரதராஜன் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மதுரையில் பல கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் மிரட்டப்படுவதாகவும், காவல்துறையினரால் கைது செய்யப்படுவதாகவும் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் நேரிலும், கடிதங்கள் மூலமும் தெரிவிக்கின்றனர்.
கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் தொழில் ரீதியாக சேனலை பெற்று மக்களுக்கு ஒளிபரப்புவது அவர்களது உரிமை. இதில், இன்னொரு நிறுவனம் தலையிட்டு, தன்னுடைய நிறுவனத்தின் சேனல்களைத்தான் ஒளிபரப்ப வேண்டும் என்று வலியுறுத்துவது முறையாக இருக்காது.
இந்த பிரச்சினையில் காவல்துறை ஒரு சார்பாக செயல்படுகிற நிலைப்பாட்டையும் தாங்கள் கவனித்து நிவர்த்தி செய்திட வேண்டுகிறோம்.
எனவே, முதலமைச்சர் கருணாநிதி இந்த பிரச்சினையில் தலையிட்டு, கேபிள் டி.வி. உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் சேனலை பெற்று, தொழில் செய்வதற்கு உரிய வாய்ப்பையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது போல், உடனடியாக கேபிள் டி.வி. நிறுவனத்தை அரசே தொடங்கி நடத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.