மின்வெட்டை கண்டித்து கோவையில் வரும் 7ஆம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரில் தினம் ஒன்றரை மணி நேரம், புறநகரங்களில் 3 மணி நேரம், மற்ற மாவட்டங்களில் 5 மணி நேரம் என அதிகாரப்பூர்வமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின்சாரத்தேவை 9,567 மெகாவாட் ஆகும். இதில் உற்பத்தியாவது 6,048 மெகாவாட் மட்டுமே என்று அறிகிறோம். பற்றாக்குறை 3,500 மெகாவாட்டுக்கு மேல் உள்ளது. இதை எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த காலத்தில் ஒரு சிறு அளவே மின்வெட்டு செயலில் இருந்தது. அதை ஜெனரேட்டர்கள் மூலம் சமாளித்தனர்.
ஆனால், இன்று மின்சாரம் தருவதில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை தனியார் ஜெனரேட்டர்கள் மூலம் சமாளிக்க முடியாது. ஏனெனில் அதற்கும் டீசல் தேவை. அதிலும் பற்றாக்குறை உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால நலனைக் கருதி இந்த அரசுகள் திட்டங்களை தீட்டவில்லை. இன்றைக்கு மின் உற்பத்தி திட்டங்களை போட்டாலும் பலன் கிடைப்பதற்கு 4 ஆண்டுகளாகும்.
மின்சாரம் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த துறையும் இயங்க முடியாது. ஆகவே இன்றைய மின்சார நெருக்கடி தமிழ்நாட்டில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை தருவோம் என்று பேசிவிட்டு தமிழக மக்களுக்கு இன்று தி.மு.க. அரசு இருண்ட காலத்தை மட்டுமே தந்திருக்கிறது.
ஆகவே, அரசை கண்டித்து மக்களின் துயரங்களில் பங்குகொள்ளும் வகையில் தே.மு.தி.க.வும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வரும் 7ஆம் தேதி கோவையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.