23,600 ‌நியாய‌விலை கடைகளு‌க்கு ந‌வீன ‌மி‌ன்னணு தராசுக‌ள்: த‌மிழக அரசு!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (12:39 IST)
அத்தியாவசியப் பொருள்களைச் சரியான எடையில் வழங்கிட 23,600 நியாயவிலைக் கடைகளில் 8 கோடியே 50 லட்ச ரூபா‌ய் செலவில் நவீன மின்னணுத் தராசுகள் நிறுவப்பட்டுள்ளன'' எ‌ன தமிழக அரசு அறி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், தமிழகத்தில் மொத்தம் 29,760 நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றுள் 6,160 நியாய விலைக் கடைகளில் ஏற்கனவே நவீன மின்னணுத் தராசுகள் படிப்படியாக நிறுவப்பட்டிருந்தன.

அந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, நவீன மின்னணுத் தராசுகள் நிறுவப்படாமல் நிலுவையில் இருந்த எஞ்சிய 23,600 நியாய விலைக் கடைகளிலும் நவீன மின்னணுத் தராசுகளை உடனடியாக நிறுவிட முதலமைச்சர் கருணா‌நி‌தியா‌ல் ஆணையிடப்பட்டது.

அந்த ஆணையின்படி, மொத்தம் 8 கோடியே 50 லட்சம் ரூபா‌ய் செலவில் நவீன மின்னணுத் தராசுகள் கொள்முதல் செ‌ய்ய‌ப்பட்டு, 23,600 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளிலும் நிறுவப்பட்டுள்ளன.

இதன்மூலம் நவீன மின்னணுத் தராசுகள் இல்லாத நியாய விலைக் கடைகளே தமிழகத்தில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதென்றும், மேலும் அத்தியாவசியப் பொருள்களைப் பொதுமக்களுக்கு எடைகுறைவின்றி வழங்கிட வகை செ‌ய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்