உலகம் வெப்பமடைவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (10:55 IST)
''உலகம் வெப்பம் அடைந்து வருவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
webdunia photo
FILE
சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி, எக்ஸ்னோரா அமைப்பு ஆகியவற்றின் சார்பில் உலகம் வெப்பம் அடைந்து வருவதை தடுத்து, சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 'புவி வெப்ப தடுப்பு விழிப்புணர்வு' பிரசார பயணம் நடத்தப்படுகிறது.
இந்த விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில், இப்போது இருக்கும் முக்கிய பிரச்சினை, உலகம் வெப்பம் அடைந்து வருகிறது என்பதுதான். சர்வதேச சுற்றுச் சூழல் மாநாட்டில் உலகிற்கு வரக்கூடிய பேராபத்து பற்றி விஞ்ஞானிகள் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.
உலகம் வெப்பம் அடைவதால் துருவ பகுதியில் உள்ள பனிகள் உருகும், கடல்மட்டம் உயரும், கடும் வறட்சி ஏற்படும், உணவு உற்பத்தி குறையும், விலைவாசி உயரும், புதிய நோய்கள் வரும் சூழ்நிலை உண்டாகும் என இப்படி பல பிரச்சினைகளை பட்டியலிட்டுள்ளனர்.
நம்மை போன்ற மனிதர்கள்தான் இதற்கு காரணம் என்றும் எடுத்து கூறியிருக்கிறார்கள். உலகம் வெப்பமடைந்து வருவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும். தாங்கள் உருவாக்க கூடிய கரியமில வாயுவை கட்டுப்படுத்த வேண்டும்.
நிலக்கரியில் இருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது. பெட்ரோல் மூலம் வாகனங்கள் ஓடுகின்றன. இந்த இரண்டையும் கட்டுப்படுத்தினால், உலகம் வெப்பமடைதலை தடுத்திட முடியும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.