13 நாட்கள் நடந்து வந்த விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் விலக்கல்!
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (10:07 IST)
கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு கூறி 13 நாள் நடந்த விசைத்தறிகள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததுள்ளது.
கோவை மாவட்டம் பல்லடம், சோமனூர், அவிநாசி, திருப்பூர் பகுதிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறியாளர்களில் பெரும்பாலானோர், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நூல் பெற்று, கூலிக்கு துணி நெய்து கொடுப்பவர்கள். நூறு விழுக்காடு கூலி உயர்வு கோரி, விசைத்தறியாளர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதுதொடர்பாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலூர் பழனிச்சாமி, அன்பரசன், வெள்ளகோவில் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை இறுதியில் சோமனூர் ரகத்திற்கு 32 விழுக்காடும், மாவட்டத்தின் இதர பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் ரகங்களுக்கு 27 விழுக்காடும் கூலி உயர்வு ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், விசைத்தறியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 32 விழுக்காடும், மற்ற ரகங்களுக்கு 27 விழுக்காடும் கூலி உயர்வுக்கு இரு தரப்பிலும் ஏற்றுக் கொண்டனர்.
கடந்த 2005ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருந்து இந்த உயர்வு அமல்படுத்தப்படும். இதை கண்காணித்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் அமல்படுத்தப்படும்.
அதேபோல், விசைத்தறி கூடங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, விசைத்தறி உரிமையாளர்கள் வழங்கவேண்டிய சம்பள உயர்வு, கடந்த 2005ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து அதிகரித்து வழங்குவதற்கு உரிய தீர்வை காண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தையடுத்து கடந்த 13 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தத்தையும் விசைத்தறி உரிமையாளர்கள் உடனடியாக கைவிட ஒப்பு கொண்டுள்ளனர் என்று கூறினார்.