சமுதாயத்தில் பெண்களும், அவர்களின் உரிமைகளும் மறுக்கப்படுகிறது என கவிஞர் கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் உதவி பேராசிரியை லட்சுமி வரவேற்றார்.
பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் டாக்டர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
விழாவில் கோவை சங்கரா கண் மருத்துவமனை இயக்குனர் ராதாரமணி சிறப்புரையாற்றினார். சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எல்.பி. தர்மலிங்கம் வாழ்த்தி பேசினார். புதியதாக தொடங்கப்பட்ட பெண்கள் மேம்பாட்டு இயக்கத்தை மாநிலங்களவை உறுப்பினரும், கவிஞருமான கனிமொழி தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, இந்த சமுதாயத்தில் பெண்கள் இரண்டாம் தரமான குடிமகனாய் மதிக்கப்படுகின்றனர். தான் நினைப்பதை பெண்கள் சுதந்திரமாய் செய்ய முடிவதில்லை. பெரும்பான்மையான இடங்களில் பெண்களின் உரிமைகள், சுதந்திரங்கள் மறுக்கப்படுகிறது. சில பெண்கள் மட்டுமே சாதித்துள்ளனர். ஆனால் ஒவ்வொறு பெண்களும் சாதிக்க வேண்டும்.
பெண்களுக்கு எல்லை கோடுகள் போடப்படுகிறது. தன் திறமை, அறிவை பெண்கள் வெளிப்படுத்தினால் அவள் ஆங்காரம் பிடித்தவள் என்கின்றனர். சமுதாயத்தில் பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர், பெண்களுக்கு சுவாசிக்ககூட உரிமை மறுக்கப்படுகிறது என்று கனிமொழி கூறினார்.