சென்னையில் இன்று முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசிய ப. சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பா.ம.க. மத்தியில் கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தில் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது. நாளைக்கே அவர்கள் மீண்டும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம். பா.ம.க. இதே கூட்டணியில் தொடர்ந்து இருக்க கூடிய சூழ்நிலை உருவாகலாம்" என்றார்.
காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என்று கம்யூனிஸ்டு கட்சி விமர்சித்து உள்ளது பற்றி கேட்டதற்கு, கடந்த 50 ஆண்டு காலமாக பலமுறை இது போன்ற விமர்சனங்களை காங்கிரஸ் சந்தித்து உள்ளது. நாடு என்ற கப்பலை செலுத்தும் மாலுமியாக காங்கிரஸ் உள்ளது.
நாட்டுக்கு எப்போதெல்லாம் மிகப்பெரிய துன்பங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியைத்தான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என கம்யூனிஸ்டு கூறியது சிறுபிள்ளத்தனமான விமர்சனம் என்று அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.