பா.ம.க. வெளியேற்றப்பட்டதால் தி.மு.க. கூட்டணி பலவீனம் அடையவில்லை: கருணாநிதி!
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (13:44 IST)
தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்டதால் எங்கள் கூட்டணி பலவீனம் அடைந்து விடவில்லை என்ற முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நீடித்திருந்தால் எங்கள் கூட்டணி இன்னும் பலம் வாய்ந்ததாக இருந்திருக்கும். ஆனால் பா.ம.க. விலகியதால் கூட்டணி பலவீனம் அடைந்து விடவில்லை. தற்போதைய நிலைமைக்கு பா.ம.க.தான் முழு காரணம்.
தி.மு.க. விற்கு எதிராக பா.ம.க.வினர் பேசிய அவமானகரமான, வன்முறை பேச்சுக்கள் எங்களை மிகவும் காயப்படுத்திவிட்டது. 'காடு வெட்டி' குருவின் மிக மோசமான ஆத்திரத்தைத் துண்டும் பேச்சுக்கு இது தவறு என்று தெரிந்திருந்தும் பா.ம.க. தலைமை வருத்தம் தெரிவிக்க தவறிவிட்டது.
எந்த உள்நோக்கத்துடனும் பா.ம.க.வை கூட்டணியில் இருந்து நாங்கள் நீக்கவில்லை. இந்த சூழ்நிலைக்கு அவர்களே தான் காரணம். சமரச முயற்சியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இது நன்கு தெரியும்.
பா.ம.க. நீங்கியதாலும் இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாலும் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு எந்தவித பாதிப்போ அல்லது பலவீனமோ ஏற்படும் என்று நான் கருதவில்லை.
தமிழகத்தில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இது எனக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இதை உணர்ந்து அவர்கள் மேலும் திறமையாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.