த‌மிழக‌த்‌தி‌ல் பேரு‌ந்து கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படவில்லை: நேரு!

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (10:44 IST)
தமிழக‌த்‌தி‌ல் பேரு‌ந்து கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படவில்லை என்று போ‌க்குவர‌த்து‌த் துறை அமைச்சர் கே.எ‌ன். நேரு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில், "காஞ்சீபுரத்திலிருந்து திருவண்ணாமலை சென்ற சிறப்பு பேரு‌ந்‌தி‌ல் கூடுதலாக பயண கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானதாகும்.

காஞ்சீபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்தவாசி, சேத்துப்பட்டு வழியாக இயக்கப்படும் பேரு‌ந்துக‌ளி‌ல் ரூ.36-ம், செய்யாறு-போளூர் வழியாக இயக்கப்படும் பஸ்களில் ரூ.40-ம் பயண கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் பவுர்ணமி தினம் உள்பட அனைத்து நாட்களிலும் ஒரே மாதிரியாகத்தான் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 16ஆ‌ம் தேதி பவுர்ணமி தினத்தன்று காஞ்சீபுரத்திலிருந்து வந்தவாசி-சேத்துப்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு மொத்தம் இயக்கப்பட்ட 41 நடைகளில் 38 நடைகள் ரூ.36 கட்டணத்தில் நேரிடையாகவே இயக்கப்பட்டுள்ளது. மற்ற 3 நடைகள் தென்னங்கூர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல சிறப்பு பேருந்தாக இயக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் - திருவண்ணாமலை பிரதான சாலையிலிருந்து உள்பக்கம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தென்னங்கூர் கோவில் உள்ளது. பவுர்ணமி தினத்தன்று இக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்புப் பேருந்தாக இயக்கப்பட்ட 3 நடைகளில் மட்டுமே தென்னங்கூர் உள்ளே சென்றுவர நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5‌ம் தென்னங்கூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக அங்கு அரைமணி நேரம் பேருந்தை நிறுத்தி இயக்குவதற்கு ரூ.5‌ம் சேர்த்து மொத்தம் ரூ.46 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இது பவுர்ணமி தினத்தில் தென்னங்கூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் நன்மைக்காகவே இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்தாகும். எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும்.

வழக்கமான தடத்திலிருந்து பக்தர்கள் வசதிக்காக உள்புறத்தில் அமைந்துள்ள கோவிலுக்காக இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் வசூலிக்கப்பட்ட நியாயமான கட்டணத்தை குறிப்பிட்டு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதுபோல் மிகைப்படுத்தி வெளிவந்துள்ள செய்தி‌யி‌ல் சிறிதும் நியாயமில்லை" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்