சேது சமுத்திர திட்ட வழக்கு: தமிழக வழக்கறிஞர் நியமனம்!
சனி, 23 ஆகஸ்ட் 2008 (10:01 IST)
உச்ச நீதிமன்றத்தில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்குகளை கவனிப்பதற்காக, வழக்கறிஞர் ஆர்.நெடுமாறனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், உச்ச நீதிமன்றத்தில், சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான வழக்குகளை வழக்கறிஞர் ஆர்.நெடுமாறன், கூடுதல் பொறுப்பாக ஏற்பார்.
இது வரையில் இந்த வழக்கு விவகாரங்களை கவனித்து வந்த வழக்கறிஞர்கள் வி.ஜீ.பிரகாசம், டி.ஹரிஷ்குமார் ஆகியோர் சேது சமுத்திர வழக்கு சம்பந்தமான வழக்கு கட்டுகளை வழக்கறிஞர் ஆர்.நெடுமாறனிடம் கொடுக்குமாறு இருவரையும் கோரப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் நடந்த உண்ணாவிரதம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யத் தவறிய அரசு வழக்கறிஞர்கள் வி.ஜீ.பிரகாசம், டி.ஹரிஷ்குமார் ஆகியோரை முதலமைச்சர் கருணாநிதி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.