அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சு அரசியல் நாகரீகமற்றது என்று கூறி, அவரது பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி இடதுசாரி கட்சிகள் அத்வானியோடு கூட்டணி சேர்ந்து மன்மோகன் சிங் அரசை கவிழ்க்கச் சதி செய்தது என்றும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றவிடாமல் சீனாவுடன் கைக்கோர்த்துக் கொண்டு இடதுசாரிகள் மறைமுகமாகச் சதி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது என்றும் கூறியிருந்தார்.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் "இடதுசாரி கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள்" என்றும் கூறியிருந்தார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் இந்த பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என். வரதராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தி.மு.க. அமைச்சரின் பேச்சு அபத்தமானது, அரசியல் நாகரீகமற்றது, ஒரு கருத்து வித்தியாசம் வந்தவுடன் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவது அமைச்சராக இருக்கும் ஆற்காடு வீராசாமிக்கு அழகல்ல என்றும் தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து வரும் 25ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.